ஒரு மலைக்காட்டின் உச்சியில் நரி ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த நரிக்கு இரு பிள்ளைகள் இருந்தன. அவர்கள் இருவருமே மிக அழகாக இருந்ததால் மிக கவனமாக அவர்களை வளர்த்து வந்த அந்த நரி மலையின் உச்சியிலேயே ஒரு வீடு கட்டி வசித்து வந்தது.தினமும் காலையில், நரி வீட்டிற்குள் தமது குழந்தைகளை கவனமாக இருக்க சொல்லிவிட்டு உணவு தேடி சென்றுவிடும். அந்த குழந்தைகளும் தாயின் பேச்சினைக் கேட்டு வீட்டிற்குள்ளாகவே இருக்கும். அவ்விருவர்களில் ஒரு நரிக்கு தாயின் மீது கொள்ளைப்பாசம். அதேசமயம் இன்னொரு நரிக்கோ தாயின் மீது ஒருவிதமான கோபம் இருந்து கொண்டே இருந்தது. அதாவது, தாயின் கட்டளையின்படி காட்டின் உச்சியிலேயே இருப்பதால், மற்றவர்களைப் போல ஒரு ஆடம்பரமான வாழ்க்கை வாழமுடியவில்லை என்பதால்தான் கோபம்.இப்படியே நாட்கள் சென்று கொண்டிருக்கையில் ஒருநாள்,
தாய்நரி : மகள்களே! நான் போய் உணவு தேடி வருகிறேன், எங்கும் வெளியில் சென்றுவிடாமல் வீட்டிற்குள்ளே கவனமாக இருங்கள் எனக்கூறி விட்டு உணவு தேடி சென்றது.
அக்கா நரி : அம்மா வெளியில் சென்று விட்டாள், இனிநாம் வெளியில் சுற்றினால் நமக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுவிடும். அதனால் வீட்டிற்க்குள்ளேயே இருப்போம்.
தங்கை நரி : அட நீ கொஞ்சம் சும்மா இரு! எப்போது பார்த்தாலும் இந்த காட்டிற்க்குள்ளாகவே நாம் அடைந்து கிடக்கின்றோம், நாம் இப்போது இந்த காட்டினை விட்டு வெளியே சென்றுவிட்டால் விருப்பம்போல வாழலாம் மேலும் நாம் மிக அழகாக இருப்பதால் அங்கேயே ஒரு வசதியான துணையை ஏற்று அமைத்துக் கொள்ளலாம்.
அக்கா நரி : நம் அம்மா நமது நன்மைக்காகவே இங்கே இருக்கும்படி கூறியுள்ளாள். நீ இப்படியெல்லாம் யோசித்தால் அது நமக்கே தீங்காகிவிடும். மேலும் இந்த காட்டில் புலி சிங்கங்கள் எல்லாம் உள்ளது, எனவே, நாம் வீட்டிற்குள்ளேயே இருப்பதுதான் நமக்கு நல்லது என தங்கையை இழுத்துக் கொண்டு கதவை சாத்திக் கொண்டது.
தங்கை நரி : இவளும் வாழமாட்டா, நம்மளையும் வாழவிடமாட்டா என முணுமுணுத்துக் கொண்டே வீட்டிற்குள் சென்றது.
அதேசமயம், அந்த ஊரின் ராஜாவும் மந்திரி இருவரும் வேட்டையாட அந்த காட்டிற்குள் வந்தனர். நெடுநேரமாகியும் கண்ணுக்கு விலங்குகள் ஏதும் சிக்காததால் இன்னும் உள்ளே செல்லலாம் என நடுக்காட்டிற்குள் வந்து வழிமறந்த அவர்கள் தீராதாகத்திற்கும் உள்ளாகினர்.
மன்னர் : மந்திரியாரே! நாம் வெகுதூரம் வந்தும் இன்னமும் ஒரு வேட்டையும் சிக்கவில்லை, உச்சிவெயிலின் தாக்கத்தினால் தண்ணீர் தாகம் வேறு உயிரைக் கொள்கிறது. அருகே எங்காவது தண்ணீர் கிடைக்கிறதா என்று தேடிவிட்டு பிறகு வேட்டையை தொடர்வோம்.
மந்திரி : ஆம், மன்னா ஆனால், இந்த நடுக்காட்டில் எங்கு தண்ணீர் கிடைக்கும் என்றே தெரியவில்லை. கண்ணிற்கெட்டியவரை நீர்நிலை இருப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை. இன்னும் சிறிது உள்ளே சென்று பார்க்கலாம் மன்னா! என்றவாறே நடக்க தொடங்கினர்.
தாகம் மிக அதிகமானதால் களைத்துப்போய் நடக்க முடியாத நிலைக்கு ஆளான ராஜாவும், மந்திரியும் அருகே இருந்த ஒரு பாறையின் மேல் அமர்ந்தனர். அப்போது மலையின் உச்சியில் இருந்து பாறையின் வழியே மஞ்சள் கலந்த நீர் வருவதைக் கண்டு இந்த மலைக்காட்டின் நடுவே யாரு இருப்பது என குழப்பத்துடன் தண்ணீர் வந்த வழியே நடக்கத்தொடங்கினர்.
(தொடரும்)
0 Response to "தாய் நரியும் அதன் நன்றி கெட்ட குட்டியும்!! பாட்டி கதை - பகுதி 1"
Post a Comment